Friday, June 5, 2020

இருளை ஒளியால் நிரப்பியவர்

ஒரு நாள் பாடசாலையிலிருந்து ஒரு சிறுவன் வீடு திரும்பினான். அவன் ஒரு கடிதத்தை கொண்டு வந்து தனது தாயாரிடம் கொடுத்தான். இது ஆசிரியர் கொடுத்த கடிதம். உங்களிடம் கொடுக்கும் படியும் நீங்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறினார். என அச்சிறுவன் கூறினான்.
தாயார் ஆவலுடன் கடிதத்தை பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அந்தத் தாயின் கண்கள் கலங்கத் தொடங்கின. அதை அவதானித்த சிறுவன் "அதில் என்ன எழுதி இருக்கிறது" என்று தயக்கத்துடன் கேட்டான்.
"உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவனது அறிவுக்கு ஏற்ற வகையில் இந்த பாடசாலை இல்லை. அதனால் அவனை வீட்டில் வைத்து நீங்களே கற்றுக் கொடுங்கள்" என்று உரத்து வாசித்துக் காட்டினார்.அதைக்கேட்ட சிறுவன் மகிழ்ச்சியில் உற்சாகமாகச் சத்தமிட்டான்.
அவனுக்கு பாடசாலையில் கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும் , எழுத்து , வாசிப்பு , கணிதம் போன்றவற்றை தனது தாயாரிடம் கற்று வந்தான்.அவனது தாய் எப்போதுமே "உன்னால் முடியும்" என்று கூறுவார்.
தாய் தன்னுள் ஏற்படுத்திய தன்னம்பிக்கை அவனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. அவனை தாயார் உருவாக்கினார். யாருக்காகவாவது வாழவேண்டும். யாரையும் ஏமாற்றக்கூடாது. என்பதையும் கற்பித்தார்.
அவன் வாசிப்பிலும் சுய கற்றலிலும் ஆர்வம் உடையவனாக இருந்தான். விஞ்ஞான ஆய்வு நூல்களை அதிகம் வாசித்தான். அதிலுள்ள பரிசோதனைகளை செய்து பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டான்.
ஆண்டுகள் பல உருண்டு ஓடின. சிறுவன் வளர்ந்து பெரியவனானான். அவனின் தாயாரும் இறந்து விட்டார். புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலகம் போற்றும் வகையில் மகத்தான விஞ்ஞானி ஆனார். அவருக்கு பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
ஒரு நாள் வீட்டில் ஏதோவொன்றை தேடிக்கொண்டிருந்தார். அப்போது சிறு வயதிலேயே அம்மாவிற்கு ஆசிரியர் எழுதிய கடிதம் அவர் கண்ணில் பட்டது. தன்னைப் பற்றி உயர்வாக எழுதியிருந்த அக்கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படித்தார்.
ஆனால் அக்கடிதத்தில் இருந்த வரிகள் அவரது அம்மா அன்று வாசித்துக்காட்டியவை அல்ல.மாறாக "உங்கள் மகன் புத்திக்குறைபாடு உடையவன். அவனை தொடர்ந்து எமது பாடசாலையில் வைத்துக் கொள்ள முடியாது. அவனை எமது பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் " என்று எழுதப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை பார்த்ததும் மகத்தான அந்த விஞ்ஞானி அதிர்ந்து போய் விட்டார். இந்த விடயம் சிறுவயதில் எனக்கு தெரிந்திருந்தால் எந்தளவிற்கு மனதளவில் முடங்கி போயிருப்பேன். தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த தன் தாயாரை நன்றியுடன் நினைத்துக்கொண்டார்.
மின்குமிழை கண்டு பிடித்து இரவை ஒளியால் நிரப்பிய அந்த அற்புத மனிதர் அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"புத்திக்குறைபாடுடைய தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய தாயாரின் தன்னம்பிக்கையால் இந்நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞானி ஆனான் "Thomas Edison - Wikipedia
ஒரு குழந்தைக்கு வீடு தான் முதல் பாடசாலை. தாய் தான் முதல் ஆசிரியர்.

No comments: