Monday, June 1, 2020

சுவையான உணவு

ஒரு குட்டிக்கதை….
ஒரு நாள் அரசன் ஒருவன் தனது அரச சபையில் "உலகில் மிகவும் சுவையான உணவை யாராவது எனக்கு தரமுடியுமா? " என கேட்டுக்கொ‌ண்டான். அங்கிருந்தவர்கள் "உலகில் மிகவும் சுவையான உணவு எது?" என யோசித்துக்கொண்டிருக்க மந்திரி ஒருவர் "என்னால் தர முடியும் மன்னா. ஆனால் காட்டிற்குள் சென்றால்தான் அதனை பெறமுடியும். " என்று கூறினார். அடுத்த நாள் காலையில் மந்திரயோடு குதிரையுடன் பயணத்தை தொடங்கினான் மன்னன். காட்டிற்குள் சிறிய தூரம் சென்றதும் "இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? " என மன்னன் கேட்டான். மந்திரி "கொஞ்ச தூரம் தான் மன்னா " என்று பதிலளித்தார். மீண்டும் சிறிய தூரம் சென்றதும் மன்னன் அதே கேள்வியை கேட்டான். மந்திரி "கொஞ்ச தூரம் தான் மன்னா " என்று பதிலளித்தார். சூரியன் தலைக்கு மேல் வந்துவிட்டது. மன்னன் "எனக்கு கடும் பசியாக உள்ளது. அந்த உணவை எப்போது தருவீர்கள்? " என கேட்டான். மன்னனின் நிலையை அறிந்த மந்திரி ஒரு கட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டார். தனது பையில் இருந்து மாவினால் செய்யப்பட்ட ஒரு உணவை எடுத்து மன்னனுக்கு கொடுத்தார். கடும் பசியிலும் பயணக்களைப்பிலும் இருந்த மன்னன் அதை உடனடியாக வாங்கி சாப்பிட்டான். "ஆஹா…இப்படியொரு சுவையான உணவை என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதேயில்லை. இந்த உணவு உங்களுக்கு எப்படி கிடைத்தது? " என்றான் மன்னன். அதற்கு மந்திரி "மன்னா…இது எம் மக்களால் உண்ணப்படும் சாதாரண உணவுதான் வேறொன்ருமில்லை. உங்களுக்கு ஏற்பட்ட பசியும் பயணக்களைப்பும்தான் இதனை சுவையாக எடுத்துக்காட்டியிருக்கிறது." என்றார் மந்திரி. தன் நிலையை அறிந்து சிரித்துக்கொண்டான் மன்னன். பிறகு இறைவன் எமக்கு தந்த, நாம் உண்ணக்கூடிய அனைத்து உணவுகளும் உலகில் சிறந்த உணவுகள்தான் என்பதை உணர்ந்த மன்னன் மந்திரியிற்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான்.
"மனம் கொண்டதே மாளிகை"

No comments: