`வெறும் பாலைக் குடிக்காதே... அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள் கலந்த பாலைத்தான் குடிப்பாராம். உண்மையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை...
தங்கமான பலன்கள்...
* மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.
* இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்; தொண்டை கரகரப்பாகும் பிரச்னைக்கு உடனடி நிவாரணம் தரும். மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
* மஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்கும். முடக்கு வாதத்தின் காரணமாக உண்டாகும், வீக்கத்தையும் குறைக்கும். தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.
* இதை தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும். `உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்தார்’ என்பார்கள். தோல்களில் எங்காவது புள்ளிகள், சொறி, சிரங்குகள் இருந்தால், மஞ்சள் கலந்த பாலில் பஞ்சை நனைத்து அங்கு தடவினால் விரைவில் குணமாகும்.
* ஆயுர்வேதம், `மஞ்சள் கலந்த பால் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும்’ என்கிறது. இது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வு தரும். நிணநீர் மண்டலம் மற்றும் ரத்தநாளங்களைச் சுத்தப்படுத்தி, அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
* இது, பைட்டோஈஸ்ட்ரோஜெனை (Phytoestrogens) உற்பத்தி செய்து, ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். அத்துடன் பெண்களின் கர்ப்பம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். மஞ்சளுக்கு வலியைக் குறைக்கும் தன்மை அதிகம் இருப்பதால், மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்றுவலியைத் தடுக்கும். கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடர்ந்து மஞ்சள் கலந்த பாலைக் குடித்துவருவது நல்லது.
* மஞ்சள் கலந்த பால், அழற்சி எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வயிற்றில் புண், உடல்வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் தரும். செரிமான மண்டலத்தைச் சிறப்பாக இயங்கச் செய்யும்.
* அல்சைமர் (Alzheimer) நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதைத் தொடர்ந்து பருகிவந்தால், நோயின் தீவிரம் குறையும்.
செய்முறை:
ஒரு கிளாஸ் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து பாலை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாகக் குடித்தால், மேலே உள்ள பலன்களைப் பெறலாம்.
கவனிக்க...
* ஒரு முறை இந்தப் பாலை குடித்ததும், உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்துவது நல்லது. ஒவ்வாமையால் சிலருக்கு இப்படி ஏற்படலாம்.
* இந்தப் பாலை அளவுக்கு அதிகமாகக் குடித்தால், சிலருக்கு உடல் உஷ்ணமாகி வயிற்றுப்போக்கு, தலைவலி, ஏப்பம், அஜீரணம், பித்தப்பைச் சுருக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகலாம்.
* கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளில் மஞ்சள் கலந்த பாலை அதிக அளவில் அருந்தினால், கருப்பைச் சுவர் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் அளவுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைத் தாண்டி அருந்தும்போது, பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை நினைவில்கொண்டு அளவோடு குடிப்பது உடலுக்கு நல்லது.
No comments:
Post a Comment