Sunday, July 5, 2020

டீன்ஏஜ் பெண்ணிடம் சரி தவறு

இதற்கு சுருக்கமான பதில் - சரி தவறு‌ என்பதை நீங்கள் பதின் வயதினருக்கு சொல்ல முடியுமே தவிர புரிய வைக்க முடியாது.
காரணங்களை அறிய தொடர்ந்து படியுங்கள் -
பதின் வயதில் இருக்கும் குழந்தைகள் மீது நம் அனைவரின் குற்றச்சாட்டு என்ன?
  • ஒரு விஷயம் தப்புன்னு தெரிஞ்சும் ஆபத்துன்னு தெரிஞ்சும் அதை செய்வது
  • சொல்பேச்சைக் கேட்காமல் இருப்பது. கூடக்கூட எதிர்த்து பேசுவது
  • அறிவால் ஆராய்ந்து முடிவு எடுக்காமல் உணர்வுகளால் உந்தப் படுவது
சரிதானே? இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (இந்த வயது அப்படிப்பட்டது என்பதைத் தவிர). ஹார்மோன் கோளாறு, வாழ்க்கை அனுபவம் இல்லாதது இதையெல்லாம் தாண்டி அறிவியல் பூர்வமான காரணமும் உள்ளது.
ஒரு விஷயத்தை தருக்க ரீதியில் ஆராய்ந்து பகுத்தறிவு கொண்டு விளைவுகளை கண்டறிய மூளையின் முன் பகுதியில் உள்ள prefrontal cortex மிகவும் அத்தியாவசியமானது. இந்த பகுதி தான் திட்டமிடல், பின்விளைவுகளை அறிதல், சிக்கலை ஆராய்ந்து முடிவெடுத்தல், சுய கட்டுப்பாடு மற்றும் நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு செயல்படுதல் ஆகிய திறன்களை அளிக்க கூடியது.
விஷயம் என்னன்னா, நம்மில் பலருக்கு 25 வயது வரையிலும் கூட மூளையின் இந்த பகுதி முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, பதின் வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு எடுத்து உரைத்தாலும், புரியாது.
அது மட்டுமல்லாமல், பகுத்தறிவு குறைபாடு இருப்பதால், மூளையில் உள்ள இன்னொரு பகுதியான amygdala ஓவர் டைம் வேலை பார்க்கும். அந்த பகுதியின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்வுகள் சார்ந்து ஒருவரை இயக்கும். செமல்ல?!
வண்டிய பாத்து ஓட்டுன்னு சொன்னா,
இவங்களுக்கு இதே வேல. பாத்து தானே ஓட்டறேன்? கண்ண மூடிட்டா ஓட்டறேன்? விபத்தெல்லாம் எனக்கு நடக்காது. அது எப்படி எனக்கு நடக்கும்?
அப்படின்னு தான் எரிச்சல் அடைவாங்க. அப்படி தான் அவங்களால யோசிக்க முடியும். அப்படி விபத்து ஏற்பட இருந்து மயிரிழையில் தப்பினாலும்,
அதான் நடக்கலல்ல, அப்பறம் என்ன? அதான் எனக்கு நடக்காதுன்னு சொன்னோம்ல. எப்ப பார்த்தாலும் என்னை உதாசீனப் படுத்த வேண்டியது
அப்படின்னு தான் யோசிப்பாங்க.
மூளை வளர்ச்சி இன்னும் முடிவு பெறாத பதின் வயதினருக்கு எவ்வளவு அறிவுரை கூறினாலும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதை தான். அவர்களுக்கு தேவையானது அறிவுரை அல்ல, அவர்களின் தேவைகள் - ஒப்புதல், சுதந்திரம், மகிழ்ச்சி மட்டுமே. எனவே, யானைக்கு எப்படி மருந்தை வாழைப்பழத்தில் மறைத்து கொடுப்பார்களோ அதைப்போல அறிவுரையை நட்பிலும் புரிதலிலும் மறைத்து கொடுங்கள்.
நான்கு மாதங்கள் வரை கை குழந்தைகளுக்கு கழுத்து சரிவர நிற்காது இல்லையா? அப்போ குழந்தையை தூக்கும் போது நாம் என்ன செய்வோம்?
கழுத்த ஒழுங்கா இப்படி வச்சுக்கோ அப்படி வச்சுக்கோ
ன்னு குழந்தையிடம் அறிவுரைகள் சொல்வோமா? நிச்சயமாக இல்லை. குழந்தையின் இயலாமையை புரிந்து கொண்டு குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் பின்பலம் கொடுத்து தூக்குவோம் அல்லவா?
அதைப்போலவே பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகளையும் அவர்களது இயலாமையை புரிந்து கொண்டு அவர்கள் முழுமையாக மனதளவில் வளரும் வரை பக்கபலமாக இருங்கள்.

No comments: