கதை பேசலாமா?
ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..ஒரு நாள் இரவு... மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான்.. அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.
எதற்கும் பலன் இல்லை.
மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..
மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால், அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை..
உணவு சாப்பிடுவது குறைந்து.. மன்னன் தன் பொலிவு இழந்தான்..
ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்..எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான்.. தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்..
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன.. அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி.. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .
பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்..
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே! நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.. இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன், அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்..
துறவியின் ஆலோசனைப்படி சென்ற சீடர்கள் மூலிகையுடன் வெற்றிகரமாக திரும்பி வந்தார்கள்..
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால், மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.. அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.. துறவியை வணங்கினான் மன்னன்.. மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான், பழைய பொலிவு திரும்பி விட்டது.. துறவி விடை பெற்றுக்கொண்டார்.
திரும்பி செல்லும் வழியில் பிரம்மிப்புடன் வந்துகொண்டிருந்த தன் சீடர்களுடன் துறவி தன் உரையாடலை ஆரம்பித்தார்.
"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்? மன்னனின் செவிக்குள்??
அதுதான் இல்லை.
மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம். போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும், இல்லை வெளியே வந்திருக்கும். அந்தச் சிறிது நேரத்தில். அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது.
அது மன்னனின் மனதில் குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது. எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
"குருதேவா!! அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''
மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!! பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்.
அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான்.
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது..
சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்..
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை.. நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது.
இது நகைச்சுவை அல்ல
காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல, இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு, பயத்தை விட அந்த பயத்தின் ஆவியே நம்மை சீராக சிந்திக்க விடாமல் அழுத்திவிடுகின்றது.
இன்னும் சொல்ல போனால் ஒரு நோயோ அல்லது பிரெச்சனையோ அது கொடுக்கும் தொல்லையை விட, "அதைப் பற்றி ஏற்படுத்தப் பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!
இந்த கதையில் உள்ளதை போல் காதுக்கும் பயத்திற்கும் (Hear and Fear) நிறைய சம்பந்தம் உண்டு இரண்டை பற்றியும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
முதலில் பயம்,
ஒரு விதத்தில் பயம் நல்லது தான், இந்த காலத்தில் நாம் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பதற்கு, அத்தியாவசத்திற்கு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதில், மற்றும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவதில்.
ஆனால் மற்றபடி பயம் FEAR என்பதற்கு ஒரு விரிவாக்கம்
False Evidence Appearing Real.
இந்த சொற்றொடர் தான் நமக்கு பயத்தை உண்டாக்குகிறது. அதாவது, பொய்யான ஆதாரம் உண்மையை போல் தோன்றுவது.
முதலில் இந்த பயம், அதுவும் இந்த கொரோனா காலத்தில், ஆரம்பத்தில் அந்த புதிய வகை கிருமி பற்றி அறியாததால் பதற்றமும் பயமும் இருந்தது உண்மை தான்.
ஆனால் ஒவ்வொரு நாட்டிலும், ஊரிலும் செய்த ஆராய்ச்சிகள் மற்றும் அதை உலகில் உள்ள அனைவருக்கும் இலவசமாய் தெரியப்படுத்தியதால், முன்னர் இருந்ததை காட்டிலும் இப்போது நிறைய புது புது செய்திகளையும் தகவல்களையும் அறிந்துக்கொண்டுள்ளோம்.
இவை அனைத்தும், இந்த நுண்ணுயிர்க்கு எதிரான போராட்டத்தில் இன்னும் தைரியமாய் தான் நம்மை போராட வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகை நுண்ணுயிர் மாறிலிகள் இருப்பது, அதன் வீரியம் வேறு என்பதும், வெவ்வேறு வயதினருக்கு ஏற்படும் பாதிப்பு, மற்றும் ஒவ்வொரு இரத்த வகையின் பாதிப்பு உட்பட பல தகவல்கள் நாம் அறிந்துள்ள யாவும் நம் பயத்தை போக்கவே தவிர அதிகரிக்க அல்ல.
நாம் ஓடப்போகிறோமா? இல்லை எழுந்து எதிர்த்து நின்று போராடப்போகிறோமா? நம் கையில் தான் உள்ளது இன்னும் சொல்லப்போனால் நம் எண்ணத்தில் தான் உள்ளது.அக்குபங்க்சர் வைத்திய முறையில், காதுக்கும் சிறுநீரகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு (வடிவத்திலும்). சில வேளைகளில் காதில் பிரெச்சனை இருந்தால் அது சிறுநீரகத்தில் வேறு ஏதோ பிரெச்சனை இருப்பதை அறிகுறியாக உடல் நமக்கு காண்பிக்கும்.
அதே போல் சிறுநீரகத்திற்கும் பயத்திற்கும் கூட ஒரு தொடர்புண்டு. நாம் பயந்தால் நம் சிறுநீரகம் பாதிக்கப்படும். சில வேளையில் பயத்தினால் சிறுநீர் வருவதும் இதனால் தான்.
சரி இப்போ காதுக்கு வருவோம். இந்த காது பார்த்திருக்கிறீர்களா? காது? அது எப்படி இருக்கிறது? நல்லா பாருங்க? கேள்வி குறி மாறி இருக்கிறதல்லவா? ஆம் தமிழில் கேள்வி கேட்டு தெரிந்துகொள்வதற்கும், காது கொடுத்து கேட்பதற்கும் ஒரே வார்த்தை தான், அது “கேள்வி”. ஆங்கிலத்தில் கேட்பதற்கு HEAR என்ற வார்த்தையில் ‘H’ எடுத்தால் “EAR” காது.
இந்த செய்திகள் மட்டுமல்ல தவறான செய்திகள், காழ்ப்புணர்ச்சி, கசப்பு, வெறுப்பு செய்திகள், கிசு கிசுக்கள், எதிர்மறை செய்திகள், ஆபாசங்கள், வதந்திகள், நீங்க நம்புனாலும் சரி நம்பாகாட்டியும் சரி, வேணும் னு சொன்னாலும் வேண்டாம் னு சொன்னாலும், நம் கண் முன்னே வந்து நிற்கும், காதினுள் செல்லும், நம் இதயமும் அதை விரும்பும்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு
“You cannot keep birds from flying over your head. but you can keep them from building a nest in your hair”
இப்படி பட்ட செய்திகள் நம் கண்களில் படுவது மேலே பறக்கின்ற பறவைகள் போல. அதை நம்மால் தடுக்க முடியாது.
ஆனால் அது நம் தலையில் கூடு கட்டுவதை தடுக்கலாம். அது தான் நம் எண்ணத்தை இந்த செய்திகள் கறைபடுத்தாமல் தவிர்ப்பது. நம் எண்ணங்களை பாதித்து அதிலே திளைக்கமால் உடனே வெளி வருவதற்கு பிரயாசத்தை நாம் தான் எடுக்க வேண்டும்.
இது எப்படி என்றால் ஆழமான ஒரு ஆற்றிலே அடித்து செல்லப்படுவதை போன்றது நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நீரோட்டத்தின் திசையில் அடித்து செல்லப்படுவீர்கள், எதிர் நீச்சல் செய்தால் தான் குறைந்த பட்சம் அதே இடத்திலாவது இருக்க முடியும்.
உண்மை தான், நேர்மறை எண்ணங்கள், மற்றும் செய்திகளை நாம் தேடி தான் செல்ல வேண்டும்.
When you leave something you have to cleave on to something else.
எதிர்மறை செய்திகள் விட்டு வெளியே வர வேண்டும் என்றால் நேர்மறை எண்ணங்கள் மற்றும் செய்திகள் தேடி கண்டுபிடிக்க நாம் சிறிது முயற்சி எடுக்க தான் வேண்டும்.
இன்னுமொன்று, இந்த காது இரண்டையும் சேர்த்து பார்த்து இருக்கிறீர்களா? சேர்த்தால் அது இதயம் போல் இருக்கிறதல்லவா?
ஆம் நாம் காதின் மூலம் கேட்பது தான் நம் இருதயத்தை அடைகிறது, பாதிக்கிறது. நாம் எவற்றை கேட்கிறோமோ? அது தான் நம்மை உருவாக்கக்கூடியது, உருமாற்றக்கூடியது.
ஆகையால் நம் மனசையும் மனசாட்சியையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வோம்.
படித்தமைக்கு நன்றி
No comments:
Post a Comment