அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை . அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் . இருந்த இடத்தில் இருந்தே இறைவனை காணவும் , மனதை நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் தான் மந்திர ஜபம் .
இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.
ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது ‘மந்திர ஜபம்’.
மந்திர ஜபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும் . அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக் கொள்ளலாம் .
இதற்காக 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது ,உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் எனக் கூறப்படுகிறது .
மந்திர ஜபம் செய்யும் போது வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான் மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது . மந்திர ஜபம் செய்யும் போது , கிருஷ்ண மணி என்று அழைக்கப்படும் 109 வது மணியை எப்போதும் தாண்டக்கூடாது. மேலும் மீண்டும் ஜபித்த வழியே மாலையை திருப்பி ஜபிக்க வேண்டும் என்பது நியதி .
மந்திர ஜபம் செய்வதற்கான நேரம்
சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜபம் செய்தாலும் பன்மடங்கு பலன் ஏற்படும்.
ஜபத்தில் பலவகை உண்டு
வாசிக ஜபம் : உரக்க வாய்விட்டு (பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு ) ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.
உபாம்சு ஜபம் : ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
மானஸ ஜபம் : இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.
லிகித ஜபம் : புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.
அகண்ட ஜபம் / ஜபயக்ஞம் : இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம். மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், ‘ஜபயக்ஞம்’ என்று அழைக்கப்படுகின்றது.
அஜபா ஜபம் : இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
ஆதார சக்ரங்களில் ஜபம் : இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.
புரஸ்சரணம் : இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.
சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது, அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.
ஜபம் செய்யும் திசையும் பலனும்
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால்: பெரும் தீமை
தென்மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: வருமை
மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால்: தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால்: தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால்: முக்தி கிடைக்கும்
ஜபம் செய்யும் இடமும் பலனும்
வீடு: பத்து மடங்கு பலன் பலன்
பசுவின் அருகில் : 100 மடங்கு பலன்
வனம் : 1000 மடங்கு பலன்
ஆற்றங்கரை ,குளம்: ஆயிரம் மடங்கு பலன்
பர்வதத்தின் மீது அமர்ந்து: 10000 மடங்கு பலன்
கோவிலில் அமர்ந்து: லட்சம் மடங்கு பலன்
மலை உச்சி: ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் : இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி : பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி : பல கோடி மடங்கு பலன்
குருவின் பாத கமலங்களுக்கு அருகில்: கோடானகோடி பலன்
மந்திர ஜபத்தால் ஏற்படக்கூடிய பலன்கள்
ஞாபக சக்தி,
கூர்மையாக சிந்தித்தல்,
வேகமான செயல்
தீராத வியாதியஸ்தர்களின் அருகில் அமர்ந்து ஜபம் செய்தால் அவர்கள் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம்.
தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின் மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்.