என்னால் ஒரு நிமிடம் கூட மனதை கட்டுப்படுத்தி தியானம் பண்ண முடியவில்லை ஏன்?
ஒவ்வொரு மனிதரும் ஒரே தன்மையில் இருப்பதில்லை.
பீம ஏகாதசி அல்லது நிர்ஜல ஏகாதசி.
மகாபாரதத்தில் வனவாசத்தின்போது மாதம்தோறும் வரும் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பீமனின் சகோதரர்கள் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்தனர்.
அச்சமயத்தில் அங்கு வந்திருந்த வியாசரிடம் பீமன், என் வயிற்றில் "வ்ருகா" என்னும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. என் பசியை இடையறாது தூண்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக தீரா பசியுடன் இருக்கிறேன்.
ஆதலால் என்னால் சாப்பிடாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாது. மேலும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்தால் சிறந்த பலன் என்று தாங்கள் கூறினீர்கள்.
ஆகையால் 24 ஏகாதசிகளில் ஏதாவது ஒரு ஏகாதசி நாளில் மிகுந்த சிரமப்பட்டு ஏகாதசி விரதம் அனுஷ்டித்து விடுகிறேன். ஆனால் எனக்கு மற்ற 24 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் படியாக ஏதாவது வழி இருக்கிறதா என்று வியாசரிடம் கேட்டார் பீமன்.
வியாசர் பீமனிடம் அப்படி ஒன்று இருக்கிறது. அந்த குறிப்பிட்ட ஏகாதசியின் பெயர் "நிர்ஜலா ஏகாதசி" என்றார்.
மேலும் பீமனிடம், இந்த ஒரு ஏகாதசி அன்று மட்டும் துளிநீர்கூட பருகாமல் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் வருடத்தில் 24 ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும் என்று கூறினார்.
அவ்வாறே பீமனும் இந்த குறிப்பிட்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தார்.
இதன் காரணமாக இந்த ஏகாதசிக்கு "பீம ஏகாதசி" என்று காரணப்பெயர்.
தியானத்திற்கும் ஏகாதசிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது.
நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு எப்பொழுதுமே ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஒரு குருவை பரிந்துரை செய்தார்கள்.
ஏனென்றால் பீமனை போல சில சமயங்களில் நமக்கு குறிப்பிட்ட ஆன்மிக சாதனை நம் தன்மையை ஏதுவாக இருக்காது.
ஒவ்வொரு மனிதனும் பின்வரும் கலவையால் உருவானவன்.
- உடல்
- உணர்ச்சி
- புத்திசாலித்தனம்
- சக்தி நிலை.
இது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். சிலருக்கு உடல் என்னும் தன்மை அதிகமாக இருக்கும், வேறு ஒருவருக்கு உணர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும், இப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
நம் கலாசாரத்தில் எப்போதும் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்ய, வாழும் குருவை பரிந்துரைத்தார்கள்.
ஏன் என்றால் அவர் தன்னுடைய அளப்பரிய ஞானத்தினாலும் உள்உணர்வினாலும், தன்னுடைய மாணவர்களுக்கு அவர்கள் தன்மைக்கு ஏற்ப பாதையை வடிவமைப்பார்.
ஒரு மருத்துவர் எல்லா வியாதிக்கும் ஒரே மருந்தை பரிந்துரைப்பதில்லை, வியாதியைப் பொருத்து மருந்து வேறுபடுவதைப் போல, மனிதனின் தன்மைக்கு ஏற்ப தியானங்கள் வேறுபடும்.
- உடல் தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ம யோகம் சரியாக அமையும்.
- உணர்ச்சி அதிகம் உள்ளவர்கள் பக்தி யோகம் சரியாக இருக்கும்.
- புத்திசாலித்தனம் அதிகம் உள்ளவர்களுக்கு ஞான யோகம் சரியாக இருக்கும்.
- சக்தி நிலையில் மிகுந்த ஒருவருக்கு க்ரியா யோகம் சரியாக இருக்கும்.
மேலும் எல்லா மனிதர்களும் ஒரே ஒரு தன்மையை கொண்டவர்களாக இருப்பதில்லை, மேலே சொன்ன நான்கு தன்மைகளை சேர்த்த ஒரு தனிதனி கலவையாக ஒவ்வொருவரும் இருப்பார்கள். அந்த கலவை விகிதாசாரத்தைப் பொருத்து தியானத்தின் பாதையை குரு ஒருவர் வடிவமைத்து தருவார்.
இதனாலேயே நம் கலாச்சாரத்தில் குருவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment